‘கங்குவா’ அருமையான திரைப்படம்: நடிகர் சூரி கருத்து

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி.
Updated on
2 min read

தூத்துக்குடி: “நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான படமாகத்தான் நான் இதை பார்க்கிறேன்” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் வழிபட்டார். வெளியே வந்த நடிகர் சூரி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “டிசம்பர் 20-ம் தேதி நான் நடித்த ‘விடுதலை’ படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளது. அப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா. அவர் எழுதியுள்ள பாடல்கள் தற்போதுள்ள இன்றைய இளம் தலைமுறையினரும் கேட்கும் வண்ணம் உள்ளது. நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவரது பாடல்கள் வாழ்வியல் உண்மைகளை பிரதிபலிக்கும். இளையராஜா ஒரு புத்தகம்.

எனக்கு காமெடியனாகவும், ஹீரோவாகவும் வாய்ப்பு கொடுத்தது மக்கள் தான். தற்போது விலங்கு வெப் சீரிஸ் எடுத்த இயக்குநர் பிரசாந்த் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெற்றிமாறனின் புதிய படத்துக்காகவும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான படமாகத்தான் நான் இதை பார்க்கிறேன்” என்றார் சூரி. நயன்தாரா - தனுஷ் பிரச்சனை குறித்து கேட்டதற்கு, அது தனக்கு தெரியாது என்றும், அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்றும் கூறினார். நடிகர் சூரியுடன் கோயில் கடற்கரை பணியாளர்கள், பாதுகாவலர்கள், ஐயப்ப பக்தர்கள், பக்தர்கள் போட்டோ மற்றும் செல்பி எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.

ரம்யா பாண்டியன்: அதேபோல் நடிகை ரம்யா பாண்டியனும் தனது கணவருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in