

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் ராஜ்கமல், ரெட்ஜெயன்ட் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் மட்டுமல்லாமல் அதைத் தாண்டியும் ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கன்டென்ட் கொண்ட படங்கள் பேமிலி ஆடியன்ஸை திரையரங்கு நோக்கி வரவழைக்கும் என்பதை உங்களின் திரைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இதே சந்தோஷத்துடன், திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் ‘அமரன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை குறைந்த பட்சம் திரையரங்குகளில் வெளியானதிலிருந்து 8 வாரங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இதன் மூலம் நல்ல முடிவை அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.