

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் போராடி முதல் முறையாக படத்தை இயக்குகிறார் ஜெய்கிருஷ்ணா. விஜய் சேதுபதி, கிருஷ்ணா ஆகியோரை வைத்து ‘வன்மம்’ படத்தை இயக்கிவரும் அவரைச் சந்தித்தோம்.
‘வன்மம்’ படம் எந்த மாதிரியான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது?
குரோதம், பகைமை இப்படி பல அர்த்தங்களை உள்ளடக்கியது வன்மம். விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு உணர்வு பூர்வமான படம். இதில் விஜய் சேதுபதி, ராதா என்கிற கதாபாத்திரத்திலும், செல்லத்துரை என்கிற பாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்கள்.
இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வார்த்தைகளாகத்தான் இருக்கும். நாம் பேசும் வார்த்தைகள் அந்த அளவுக்கு முக்கியமானவை. நட்பு, காதல் இப்படி அனைத்து தரப்பு உறவுகளுக்குள்ளும் வார்த்தைகளால் ஏற்படும் பிரச்சினையை ‘வன்மம்’ எடுத்துச் சொல்கிறது.
திரையுலகில் உங்கள் குருநாதர் யார்?
நான் 25 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றி வருகிறேன். அமரர் கலைமணி, ஆர்.கே.செல்வமணி, கமல், சிம்பு உள்ளிட்ட அனைவரிடமும் பணியாற்றி இருக்கிறேன். எல்லோரிடம் இருந்தும் நிறைய கற்றுள்ளேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
ஒரு இயக்குநராக உங்களுக்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதே...?
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நான் சொன்ன பல கதைகள் நடிகர்களுக்கு பிடித்துப் போய் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு பிடித்து அது நடிகர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. இப்படி பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இயக்குநராக 25 ஆண்டுகள் போராடினேன்.
‘வன்மம்’ படத்தைத்தான் முதல் படமாக பண்ண வேண்டும் என்பதற்கான காரணம் என்ன?
நான் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நிறைய கதைகளை எழுதி தூக்கி எறிந்திருக்கிறேன். நான் திரைத்துறைக்குள் அறிமுகமாகும்போது இருந்த திரையுலகமும், இப்போது இருக்கிற திரையுலகமும் வேறு. அந்த காலத்துக்கு ஏற்றதாக நான் எழுதிய கதைகளை இப்போது பண்ண முடியாது. இவ்வாறு பல விஷயங்களை யோசித்து நான் பண்ணிய கதைதான் ‘வன்மம்’. இது திரையுலகத்தை புரட்டிப் போடப்போகிற படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.
25 ஆண்டுகளாக திரையுலகில் இருப்பதாக சொல்கிறீர்கள். உங்கள் பார்வையில் தமிழ் திரையுலகின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
அதை சொல்ல ஒரு பேட்டி போதாது. அதோடு நான் இப்போதுதான் முதல் படத்தை இயக்குகிறேன். இந்நிலையில் நான் இதைச் சொன்னாலும் நன்றாக இருக்காது. விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ அதைவிட வேகமாக திரையுலகில் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. அது தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும்.
கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி திரையுலகம் நகர்ந்துக் கொண்டிருக் கிறது. ஆனால் நீங்கள் கிராமத்து படம் இயக்கி இருக்கிறீர்களே?
படத்தின் கதைக்களம் நாகர்கோவில். நாகர்கோவில், கன்னியாகுமரி வட்டார மொழி பேசும் மக்களின் வாழ்க்கையை இதில் படம் பிடித்திருக்கிறேன். அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களை நீங்கள் கிராமம் என்று கூற முடியாது. கேரளா எல்லைப் பகுதிகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளதால் பச்சைப் பசேலென இருக்கும்.