

‘அமரன்’ வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை திரையரங்க உரிமையாளர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில் ‘அமரன்’ படத்தின் வசூல், வர்த்தக நிபுணர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதன் இறுதி வசூலில் கண்டிப்பாக ஷேர் தொகை 60 கோடியைத் தாண்டும் என கணித்திருக்கிறார்கள். இது பல்வேறு பெரிய நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திரையுலகினர் படக்குழுவினரைப் பாராட்டி வரும் சமயத்தில், சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து திரையரங்க உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ், ஜி.கே சினிமாஸ் உரிமையாளர் ரூபன், உமா ராஜேந்திரா திரையரங்க உரிமையாளர் மற்றும் வரதராஜா திரையரங்க உரிமையாளர் அஸ்வத் துரைமோகன் ஆகியோர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.
இவர்களிடம் படத்தின் வசூல் நிலவரம், மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்த பல்வேறு விஷயங்களைக் கேட்டு தெரிந்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் சுமார் ஒன்றரை மணி நேரம் திரையுலக நிலவரங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு குறித்தும், சிவகார்த்திகேயனின் எளிமை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகிறார்கள்.