

ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தினை இயக்கி வருகிறார். இருவரையும் இயக்கியது, நட்பு பாராட்டி வருவது உள்ளிட்ட பல விஷயங்களை ஹாலிவுட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து லோகேஷ் கனகராஜ், “கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவருடனும் பணிபுரிவதை பெருமையாக கருதுகிறேன். நான் தீவிர கமல் சார் ரசிகன். அப்படிப்பட்ட கமல் ரசிகர், ரஜினி சார் படத்தை இயக்கினால் எப்படியிருக்கும் என்பதை காட்ட இருக்கிறேன்.
ரஜினி சாருடைய படங்களும் பிடிக்கும். கடந்த ஒரு ஆண்டாக பேசி, 2 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ரஜினி சார் ஒரு இயக்குநரின் நடிகர். திரையிலும், வெளியிலும் அவருடைய மேஜிக் பெரியது. ஒரு காட்சியை தலைக்குள் ஓட்டிக் கொண்டே இருப்பார். அந்தக் காட்சியில் இதர நடிகர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என சிந்திப்பார். அதற்கு நாம் எப்படி எதிரொலிக்க வேண்டும் என யோசிப்பார்.
நடிகர் என்பதைத் தாண்டி தான் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று கமல் சாரே சொல்லியிருக்கிறார். ஒரு காட்சியை நடிகரிடமும், தொழில்நுட்ப கலைஞரிடமும் விளக்குவதற்கு வித்தியாசம் இருக்கிறது. நடிப்பு என்று வந்துவிட்டால், அதை எப்படி வார்த்தையில் சொல்வது என தெரியவில்லை. அதை நீங்கள் படப்பிடிப்பில் தான் காண வேண்டும். ஏனென்றால் இருவருமே திரைத்துறை மேதைகள்” என்று தெரிவித்துள்ளார்.