

ஹைதராபாத்தில் உயிர் தப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ், சாலை விபத்து நிகழ்ந்த இடத்தில் இளைஞர்கள் சிலர் நடந்துகொண்ட விதத்தை வெகுவாக சாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். நடிப்பது மட்டுமன்றி படங்களை தயாரித்து, இயக்கவும் செய்துள்ளார்.
ராஜமெளலி இயக்கி வரும் 'பாஹூபாலி' படப்பிடிப்பிற்கு சென்றுகொண்டிருக்கும்போது நடிகர் பிரகாஷ்ராஜின் கார் விபத்தில் சிக்கியது. இதில் பிரகாஷ்ராஜ் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் இருந்து தப்பியது குறித்தும், விபத்து நடந்த இடத்தில் இளைஞர்களின் செயலை மிகவும் கண்டித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.
"டிராபிக் சிக்னலில், பஸ் ஒன்று எங்கள் வண்டி மீது மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். மோதலில் ஆட்டோவிலிருந்து ஒரு குடும்பமே வெளியே வந்து விழுந்தது. ஆனால், அங்கு சுற்றியிருந்த இளைஞர்களின் செய்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, தங்கள் மொபைல்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது வெட்கக்கேடான செயல்.
உயிர் போகும் தருணத்திலிருந்து மீண்ட அதிர்ச்சியைவிட, மனிதத்தன்மை அற்ற இந்தச் செயல் என்ன உலுக்கியுள்ளது. நாம் எங்கு செல்கிறோம், நமக்கு என்ன ஆனது?
வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையை உணர்ந்தேன். வாழ்க்கை முடியும் வரை வாழ்வதே ஒரே வழி என்பது தெரிந்தது. நான் கண்களை மூட இன்னும்போக வேண்டிய தூரம் அதிகம்.
என்னை நலம் விசாரித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தச் சம்பவம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் நான் இப்போது நலமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்