

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களில் கவினின் ‘ப்ளடி பெக்கர்’ 4 நாட்களில் ரூ.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
இயக்குநர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதா ரவி, ரெடின் கிங்ஸ் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கியுள்ளார். டார்க் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தில் கவின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், படத்தின் திரைக்கதை உரிய தாக்கத்தை செலுத்ததால் ரசிகர்களிடையே படம் வரவேற்பை பெறவில்லை. இதனால் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்.31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 4 நாட்களில் ரூ.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’, படங்களை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியீட்டு உரிமையை பெற்றது. படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் 4 நாட்களில் ரூ.7 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.