

சென்னை: “எனது படங்களில் இடம்பெற்ற உருவக் கேலி காட்சிகளுக்காக வருந்துகிறேன். எதிர்காலத்தில் ஆரோக்கியமான நகைச்சுவை காட்சிகளில் கவனம் செலுத்துவேன்” என இயக்குநர் எம்.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னை வந்த நான், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பு தானே தவிர, என்னுடைய தேர்வல்ல. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன். அதே ஒழுக்கத்தை என்னுடைய படப்பிடிப்பு தளங்களிலும் பின்பற்றுகிறேன். அமீரிடம் ஒரு விஷயத்தை முழுமையாக செய்து முடிக்க கற்றுக் கொண்டேன்.
‘சிவா மனசுல சக்தி’ படத்தின் தொடர்ச்சியாக தான் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை இயக்கினேன். அதில் சிவகார்த்திகேயனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து வருத்தப்படுகிறேன். ஒரு திரைக்கதை பாணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன்” என்றார். மேலும், “கடந்த காலங்களில் எனது படங்களில் நகைச்சுவைக்காக உருவக் கேலி காட்சிகள் இடம்பெற்றதையும், மத நம்பிக்கைகளை கிண்டலடித்ததையும் எண்ணி வருந்துகிறேன். இனி வரும் காலங்களில் ஆரோக்கியமான நகைச்சுவை காட்சிகளில் கவனம் செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.