

சென்னை: ‘கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுஃப் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: “நிஷாந்த் மறைவு செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். ‘கங்குவா’ படத்தின் முக்கியமான நபராக நீங்கள் என்னென்றும் நினைவுக்கூரப்படுவீர்கள். நிஷாந்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
கங்குவா: மலையாளத்தில் ‘தள்ளுமாலா’, ‘உண்டா’, ‘ஒன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் நிஷாத் யூசுஃப். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும் மம்முட்டி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். 2022-ம் ஆண்டு ‘தள்ளுமாலா’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றவர் என்பது நினைவுக் கூரத்தக்கது. தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் தான். இவர் கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.30) அதிகாலை 2 மணிக்கு காலமாகி உள்ளார். எப்படி மரணம் ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்கள் இனிதான் தெரியவரும். இவருக்கு வயது 43 ஆகிறது.
திடீரென்று ஏற்பட்ட நிஷாத் யூசுஃப்பின் மரணம் மலையாளத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இவர் எடிட்டராக பணிபுரிந்துள்ள பெரிய படம் என்றால் அது ‘கங்குவா’ தான். அப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாகவே நிஷாத் யூசுஃப்புக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. ‘கங்குவா’ படத்துக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 45’ படத்துக்கும் எடிட்டராக நிஷாந்த் யூசுஃப் தான் பணிபுரிய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.