

சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: ஜெயம் ரவி சட்டக் கல்லூரி மாணவர் என்பதை ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே உணர்த்திவிடுகிறார்கள். அரியர் வைத்துக்கொண்டு, அப்பாவிடம் திட்டு வாங்கும் வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் என்பது தெரிகிறது. ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து வெளியேறி தனது அக்காவிட்டுக்கு செல்லும் ஜெயம் ரவிக்கு பிரியங்கா மோகன் இன்ட்ரோ கிடைக்கிறது.
தொடர்ந்து காதலையும் இலவச இணைப்பாக பெறுவதை கணிக்க முடிகிறது. எந்த இடத்திலும் சீரியஸ் இல்லாமல், ஜாலியாக நகர்கிறது ட்ரெய்லர். காமெடி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ”ஊர்ல 4,5 தம்பிங்கள வைச்சிருக்கவங்கல்லாம் சந்தோஷமா இருக்காங்க, ஒரே ஒரு தம்பிய வைச்சிட்டு நான் பாட்ற அவஸ்த இருக்கே” என பூமிகா பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. அக்கா - தம்பி பாசத்தை உள்ளடக்கிய ஜாலியான ஃபேமிலி ட்ராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
பிரதர்: ‘சைரன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பிரதர்’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, ‘கேஜிஎஃப்’ புகழ் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளனர். படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ: