

லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிவது எப்போது என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.
நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கங்குவா’. பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதால் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்பை, தமிழ்நாடு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் விளம்பரப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளது.
இதில் மும்பையில் ஹாலிவுட் நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிவது குறித்து பேசியிருக்கிறார் சூர்யா. அதில் “லோகேஷ் கனகராஜும் நானும் இரண்டு படங்கள் குறித்து பேசியிருக்கிறேன். அவை ‘ரோலக்ஸ்’ மற்றும் ‘இரும்புகை மாயாவி’. அவருடைய கனவுப்படம் ‘இரும்புகை மாயாவி’.
அந்தப் படம் மீண்டும் என்னிடம் வருமா அல்லது பெரிய நடிகர் யாரிடமாவது செல்லுமா என்பது தெரியவில்லை. ஆனால், இருவரும் இணைந்து பணிபுரியும் எண்ணோட்டத்தில் இருக்கிறோம். அதற்காக தயாரிப்பாளரும் காத்திருக்கிறார். கமல் சார், ரஜினி சார் என லோகேஷ் கனகராஜ் செய்யும் படங்கள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது.
நானும் 2, 3 படங்களில் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சில படங்கள் உடனே முடிந்துவிடுகிறது, சில படங்கள் வருடங்கள் ஆகிறது. மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.