

“சூர்யா சார் அரசியல்வாதி ஆகி பல வருடங்கள் ஆகிறது” என்று ஆர்.ஜே.பாலாஜி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இதனை தமிழில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் ‘சூர்யா 45’ படத்தை இயக்கவுள்ள ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “சினிமாவில் இருக்கும் முதல் 3 நல்லவர்களை எடுத்துக் கொண்டால் அதில் முதல் இரண்டு இடங்களில் இயக்குநர் சிவா சார் தான் இருப்பார். ‘கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ‘சூர்யா45’ இயக்குநராக இங்கு நிற்பது பெருமையாக இருக்கிறது. அந்தக் கதையை கேட்டு என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அடுத்த ஆண்டு பயங்கரமா செம மாஸா ‘சூர்யா 45’ சமைத்து தரப்படும். அதற்கு நான் கியாரண்டி.
போஸ் வெங்கட் பேசும்போது, “சூர்யா சார் அரசியலுக்கு வாருங்கள்” என்றார். எனக்கு ஒரு கருத்து இருக்கிறது, அதை இங்கே சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஓர் அரசியல்வாதி என்பவர் தேர்தலில் நிற்பவர் மட்டுமல்ல. தெருவில் மரம் விழுந்துவிட்டால் அதை 4 பேர் சேர்ந்து எடுத்துப் போட்டால் நாமும் அரசியல்வாதிதான். அனைவருக்கும் சிறிது சிறிதாக நல்லது செய்பவர்களும் அரசியல்வாதி தான். அந்த வரிசையில் பார்த்தால் சூர்யா சார் அரசியல்வாதி ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. அந்த அரசியலே உங்களுக்கு போதும் சார்.
மாற்றம் தொண்டு நிறுவனம் மூலம் படித்து பெரிய ஆளாக இருக்கும் பல பேரைத் தெரியும். அவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்துக் கொண்டிருக்கிறார்கள். சூர்யா சார் ஏற்கனவே அப்படியொரு விதையைப் போட்டு அரசியலுக்கு வந்து 20-25 வருடங்கள் ஆகிறது. இதுக்குப் பிறகு தனியாக அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.” என்று பேசினார் ஆர்.ஜே.பாலாஜி.