

சென்னை: ‘நந்தன்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். தொடர்ந்து ரஜினிக்கு சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நந்தன்’. இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பின்பு, ‘நந்தன்’ படத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டினார்கள். பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதில் அடங்கும்.இந்நிலையில் தற்போது ‘நந்தன்’ படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார்.
சசிகுமார் மற்றும் இயக்குநர் இரா.சரவணன் இருவரையும் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டி இருக்கிறார். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இது தொடர்பாக சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சசிகுமார். அந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி – சசிகுமார் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவாகி இருந்தது நினைவுக் கூரத்தக்கது.