“விரக்தியில் வைத்ததே ‘மர்ம தேசம்’ டைட்டில்” - இயக்குநர் நாகா பேட்டி
சென்னை: ‘மர்ம தேசம்’ சீரியல் புகழ் இயக்குநர் நாகா ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ் மூலம் மீண்டும் தனது ஜானருக்கு திரும்பியிருக்கிறார். மர்மம், புராணங்கள், அறிவியல் என ஐந்தாம் வேதத்தை தேடும் கதையாக வெளியாகி இருக்கும் வெப் தொடர்தான் ‘ஐந்தாம் வேதம்’. இந்த இணையத்தொடர் பற்றியும் ‘மர்ம தேசம்’ சீரியல் பற்றியும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது, “பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்ததாக ஒரு கதை உண்டு. ஐந்தாம் வேதம் என்ற ஒன்று நிகழ்ந்தால் என்ன ஆகும் என்பது தான் ஐடியா. அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதை எழுத ஆரம்பித்தேன். இதைத் திரைக்கதையாக எழுதவே எனக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆனது. என்னுடைய பெயரைச் சொல்வதைவிட ‘மர்ம தேசம்’ இயக்குநர் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரிகிறது.
‘மர்ம தேசம்’ டைட்டில் வைப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 25 டைட்டில் இயக்குநர் பாலச்சந்தருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அவருக்கு எதுவுமே திருப்தி கொடுக்கவில்லை. நாங்கள் அப்போது பிரம்மதேசம் என்ற ஊரில் படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அதனால், நாங்கள் எடுக்கும் மர்மத் தொடருக்கு அந்த ஊரின் பெயரையும் சேர்த்து ‘மர்ம தேசம்’ என்று சொன்னேன். அது பாலச்சந்தருக்கு பிடித்துவிட்டது. முதலில் என்னை இந்தத் தொடர் இயக்க சொன்னபோது பயந்துவிட்டேன். ஒளிப்பதிவாளராக இருந்த நான் அதற்கு முன்பு சிறு சிறு குறும்படங்கள் இயக்கி இருந்தேன். ஆனால், இதுபோன்ற பெரிய சீரியல் இயக்கியதில்லை என்பதால் சிறு தயக்கம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஊக்கத்தால் சம்மதித்தேன். இந்த சீரியலே என்னுடைய அடையாளமாக மாறும் என்று நினைக்கவே இல்லை” என்றார். முழு நேர்காணலையும் காண:
