

சென்னை: “‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அஜித் என்னை அழைத்து அர்ஜுன், நாம் விரைவில் ஒன்றாக பணிபுரிவோம் என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது ஒருவழியாக நடந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்” என நடிகர் அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான காட்சிகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இப்படத்தில் அஜித்துடன் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். இது குறித்து அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நடிப்பு கனவைத் தொடர நான் முதன்முதலில் சென்னை வந்தபோது எப்படி, எங்கு தொடங்குவது என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
தன்னுடைய குழுவில் என்னை அனுமதிக்கும் அளவுக்கு சுரேஷ் சந்திரா கனிவானவராக இருந்தார். அது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்திக்கவும் வாய்ப்புகளைத் தேடவும் ஒரு சிறந்த வழியாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு அஜித்துடன் நெருக்கமாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவரது படப்பிடிப்புகளில் அவரைப் பார்க்கச் செல்வதில் இருந்து, அவர் ஏதேனும் சந்திப்புகளில் கலந்து கொள்ளச் செல்லும்போது அவருடன் இருப்பது, அவரது படங்களை புரொமோஷன் செய்வது வரை. இவை அனைத்தும் நேற்று நடந்தது போல் உணர்கிறேன். நம்பினால் நம்புங்கள், ‘வீரம்’ படத்தின் டீசரை இணையத்தில் பதிவேற்றியவன் நான் தான்.
இத்தனை வருடங்களாக மாறாமல் இருப்பது அஜித் கருணையும் பெருந்தன்மையும் தான். அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை தான், ஆனால் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் எனக்காக எப்போதும் ஒரு வார்த்தையை வைத்திருப்பார். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அவர் என்னை அழைத்து ‘அர்ஜுன், நாம் விரைவில் ஒன்றாக பணி புரிவோம்’ என்று சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது ஒருவழியாக நடந்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். நான் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். இது எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். அவரது அலுவலகத்தில் வேலை செய்வதிலிருந்து அவருடன் திரையைப் பகிர்வது வரை வாழ்க்கை ஒரு சுழற்சியை அடைந்திருப்பது போல் உணர்கிறேன். அஜித்துக்கு, என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.
இது எப்போதும் ஸ்பெஷல் ஆன ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை என்றென்றும் போற்றி பாதுகாப்பேன். அஜித்துடன் எப்போது இணைந்து படம் நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்ட ரசிகர்களுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. உங்களின் அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நான் என்னுடைய சிறப்பான உழைப்பையும் தருவேன் என உறுதியளிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. மைத்ரி மூவிஸ் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. எப்போதும் போல் உங்கள் அனைவரின் ஆசியும் ஆதரவும் வேண்டும். அஜித் சார், இது உங்களுக்காக, உங்களால் தான். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.