

லோகேஷ் கனகராஜ் தகவல்விரைவில் கைதி 2 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இதில் ‘டில்லி’ என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். இது இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பிசியாக இருக்கிறார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே ‘கைதி 2’ விரைவில் உருவாகும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘கைதி’ வெளியாகி 5 வருடம் ஆனதை அடுத்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், ‘எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கு நன்றி. ‘லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ தொடங்க இவர்கள்தான் காரணம். டில்லி மீண்டும் வருவார்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ‘கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ உருவாகலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.