

மும்பை: “தன்னுடைய நடிப்புத் திறனலால் மற்ற நடிகர்களை விட சூர்யா உயரமானவர்” என நடிகர் பாபி தியோல் புகழாரம் சூட்டியுள்ளார். பாபி தியோல் இதை சொல்லிக் கொண்டிருக்கும்போது அவரது கைகளை பற்றி நெகிழ்ந்தார் சூர்யா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் சூர்யாவும், பாபி தியோலும் இணைந்து அளித்த பேட்டியில், சூர்யா கூறுகையில், “கங்குவா படத்தின் சண்டைக் காட்சிகளில் பாபி தியோல் உருவத் தோற்றத்தில் பிரமிப்பாக இருப்பார். அவருக்கு முன்னால் மிகுந்த தைரியத்தையும், நம்பிக்கையையும் வரவழைத்துக் கொண்டு தான் நான் நிற்க வேண்டியிருந்தது” என கூறினார்.
அவரைத் தொடர்ந்து பாபி தியோல் கூறுகையில், “சூர்யா உடல் தோற்றத்தை பற்றி குறிப்பிடுகிறார். அவரது உயரத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர் எப்படிப்பட்ட நடிகர் என்றால் நடிப்பால் மற்றவர்களை விட மிக உயரமானவர். அவரது நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அனைத்து ஸ்டன்ட் காட்சிகளையும் அவரே செய்கிறார். அதில் ஒருமுறை அவருக்கு படுகாயங்களுடன் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே சூர்யா சிறந்த நடிகர்” என தெரிவித்தார்.
பாபி தியோல் இதை சொல்லிக்கொண்டிருந்தபோது, அவரது கைகளை சூர்யா பற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சூர்யாவின் இந்த செயல் அவரது வலியை விவரிக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.