மதன் கார்க்கியின் ‘கங்குவா’ விமர்சனம்: இணையத்தில் வைரல்

மதன் கார்க்கியின் ‘கங்குவா’ விமர்சனம்: இணையத்தில் வைரல்
Updated on
1 min read

‘கங்குவா’ படத்தினை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார் மதன் கார்க்கி. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா.

இதுவரை இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்ததால், முழுமையாக படத்தை யாருமே பார்க்கவில்லை. ‘கங்குவா’ வியாபாரத்துக்காக தயார் செய்யப்பட்ட 25 நிமிடக் காட்சிகளை மட்டுமே பலரும் பார்த்து பாராட்டி வந்தார்கள்.

தற்போது ‘கங்குவா’ படத்தில் பணிபுரிந்துள்ள மதன் கார்க்கி முழுமையான படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று ’கங்குவா’ படத்தின் முழுமையான வடிவத்தை பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் படம் கொடுக்கும் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கமான விவரிப்பு, கதையின் ஆழம் மற்றும் இசையின் கம்பீரம் அனைத்தும் சூர்யா சாரின் ஆளுமையுடன் இணைந்து, இப்படத்தை இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த படைப்பாக ஆக்குகிறது. இந்த அற்புதமான அனுபவத்தை வடிவமைத்த சிவாவுக்கும், இந்த கனவுகளின் இழையை நெய்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார் மதன் கார்க்கி.

மதன் கார்க்கியின் கருத்தை வைத்து இணையத்தில் ‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனம் என்று பகிர்ந்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in