

சென்னை: “நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ‘மங்காத்தா’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டிய புரமோஷன் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது. நம் அனைவருக்கும் கனெக்ட் ஆகும் படம் தான் இது. அப்பா, அம்மா, குழந்தை என பலரும் இருக்கும் குடும்பத்தில் பாஸ்கர் மட்டும் தான் சம்பாதிப்பவர். ஒவ்வொரு மாதமும் கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறார். இப்படியிருக்கும்போது சூழ்நிலைக்காக ஒரு விஷயத்தில் தள்ளப்படுகிறார். அது தான் கதை.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். இந்த வருடம் எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. அதனால் நான் 2 மொழிகளில் மட்டுமே தற்போது வரை டப்பிங் செய்துள்ளேன். ஆனால், படம் ரிலீஸ் சமயத்தில் படத்தின் தமிழ் வெர்ஷனில் என் குரல் இடம்பெற்றிருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். 1990-களில் நாங்கள் சென்னைக்கு வந்தோம். அப்போது நான் அதிகமாக நடிகர் ராம்கியின் படங்களை பார்த்திருக்கிறேன். சிறு வயதில் நான் ரசித்த நடிகர்களுடன் இணைந்து தற்போது நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். படத்தில் ராம்கிக்கு முக்கியமான கதாபாத்திரம். படத்தில் எனக்கும், ராம்கிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி என்னுடைய குடும்ப உறுப்பினரின் ஒருவராக மாறிவிட்டார்” என்றார்.
மேலும், “நாம் எல்லோருமே இந்தப் படத்தில் வரும் பாஸ்கர் கதாபாத்திரம் போல இருந்திருப்போம். அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் கனெக்ட் ஆகும். தீபாவளிக்கு நிறைய படங்கள் வருகிறது. ‘அமரன்’, ‘பிரதர்’ படங்கள் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெறவேண்டும். ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியும் கூட, அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகிறார். அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் எனக்கு பிடித்த படம்” என தெரிவித்தார்.