

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சார்’. விமல், சாயா தேவி கண்ணன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர், இனியன் ஜே ஹாரிஸ். அவர் கூறியதாவது:
இந்தப் படத்தில் எனது ஒளிப்பதிவு பேசப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இயக்குநராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். டெக்னிக்கலாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என ஒளிப்பதிவு படித்தேன். தற்போது முழுநேர ஒளிப்பதிவாளராகி விட்டேன். பாம்பாட்டம், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, சம்பவம், கன்னிமாடம் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன்.
‘சார்’ படத்தில் காட்சிகளைத் தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவாளராக அனைத்து ஜானர் படங்களிலும் பணியாற்ற வேண்டும் என்றாலும் கிராமம், வரலாற்றுப் படங்களில் பணியாற்றிவிட்டேன். அடுத்து ஃபேன்டஸி படம் பண்ண ஆசை இருக்கிறது. இவ்வாறு இனியன் ஜே ஹாரிஸ் கூறினார்.