

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சொன்னதாக இணையத்தில் கருத்து ஒன்று உலா வருகிறது. இதனை முன்வைத்து இணையவாசிகள் பலரும் சூர்யாவை விமர்சித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் அப்படி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இப்படத்தின் பூஜையின் போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அவருடைய தைரியமான பேச்சை வைத்து இணையத்தில் சிலர் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக இணையத்தில் சூர்யா பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டது. அதில் “நான் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.
என் அப்பா செலவுக்கு தினமும் வெறும் 500 ரூபாய் தான் கொடுப்பாரு, அதனால் தான் சினிமால ஜெயிக்கணும்னு வந்துருக்கேன்” என்று சூர்யாவின் புகைப்படம் போட்டு குறிப்பிட்டு இருந்தார்கள். இதை வைத்து சூர்யாவை பலரும் கடுமையாக வசைபாடினார்கள். சிலர் கிண்டலாக மீம்ஸ் உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், அப்படியொரு விஷயத்தை சூர்யா பேசவில்லை என்பது தான் உண்மை. இது தொடர்பாக விசாரித்த போதும் கூட, “பொய்க்கு எதற்கு பதிலளித்துக் கொண்டு” என்று பதிலளித்தார்கள்.