

எழுத்து மீது தீராத ஆவல் கொண்ட தியாகு (வெற்றி), சிறுவயதிலேயே ஊரைவிட்டு ஓடி காசிக்குச் செல்கிறார். அங்கு அவரை பார்க்கும் சாது ஒருவர் (ஹரீஷ்பெரேடி) அவருக்குத் தீட்சை வழங்கி தனது ஆன்மிக வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார்.
மனதை ஒருநிலைப்படுத்த விடாமல் தியாகுவை ஒரு சம்பவம் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. 10 வருடத்துக்குப் பிறகு துறவு வாழ்க்கையை விட்டுவிட்டு எழுத்தாளர் ஆவதற்காக ஊருக்குத் திரும்புகிறார். வழியில் சந்திக்கும் வெளிநாட்டுப் பெண்ணான ஜனனி தாமஸை (மதுரா) அவர் விரும்புகிறார். தியாகு யார்? அவரைத் தொந்தரவு செய்யும் சம்பவம் என்ன? அவர் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆனாரா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
குடும்ப சண்டை, எழுத்து, காதல், ஆன்மீகம் எனஅனைத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு ‘ஃபீல் குட்’ படத்தைத் தர முயன்றிருக்கிறார், இயக்குநர் சிவா.ஆர். ஐடியாவாக நன்றாக இருந்தாலும் அதைச் சொன்னவிதத்தில் ஏகப்பட்ட தடுமாற்றம். வெளிநாட்டுப் பெண்ணுக்கும் நாயகனுக்குமான சிறுவயது தொடர்பு, பூம்பாறை வாழ்க்கை, இடைவேளை ட்விஸ்ட் என சில காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தாலும் திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லை. முன் பின்னாக நகரும் காட்சிகளும் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்தக் குறையை போக்க, ஒளிப்பதிவும் பின்னணி இசையும் துணை புரிகின்றன.
விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவில் காசி, ரிஷிகேஷின் இயற்கையும் வாராணசியின் இரவு நேர காட்சியும் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அழகைத் தருகின்றன. மனோஜ் கிருஷ்ணா இசையில், பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. கதைக்கு ஏற்றபடி, சாதுவாக நீண்ட தலைமுடி, தாடி என எதையோ இழந்த தோற்றத்திலேயே வருகிறார், நாயகன் வெற்றி. காதல் காட்சியிலாவது ‘எக்ஸ்பிரஷனை’ மாற்றியிருக்கலாம்.
ஜனனி தாமஸாக வரும் மதுரா, நடிப்பில் கவர்கிறார். இயல்பான அவரின் சிரிப்பும் பேச்சும் ரசிக்க வைக்கின்றன. நடிப்பு அவருக்கு இயல்பாகவே வருகிறது. நூலகராகவரும் அனு சித்தாரா, ஆன்மீக குரு ஹரீஷ் பெரேடி,மேன்ஷன் உரிமையாளர் கருணாகரன், ஹீரோவின் தந்தையாக அருவி மதன், மாமாவாக விவேக் பிரசன்னா எனஅனைவரும் கொடுத்தவேலையை செய்திருக்கிறார்கள்.
எழுத்தாளரை மேன்மைப்படுத்தும் கதையில் கதாபாத்திர வடிவமைப்பிலும் அதற்கான திரை எழுத்திலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘ஆலன்’ கவர்ந்திருப்பான்.