‘லப்பர் பந்து’ ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன?

‘லப்பர் பந்து’ ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன?

Published on

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், சுவாசிகா, ஹரிஷ் கல்யாண், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இதற்கு பின்பு வெளியான படங்களை விடவும், இப்போதும் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தப் படத்தினை ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளத்தில் வெளியிட வியாபாரம் செய்திருந்தார்கள். அக்டோபர் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதும் திரையரங்கில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ‘லப்பர் பந்து’.

திடீரென்று ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளம், இப்போது ‘லப்பர் பந்து’ வெளியீடு இல்லை. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்த போது, “’லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி உரிமையினை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் படத்தினைக் காணலாம். ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளம் மூலமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் காணலாம்.

இந்தியாவில் வெளியான பின்னரே, வெளிநாட்டில் பார்ப்பதற்கு வெளியிட வேண்டும் என்று படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், ஹாட்ஸ்டார் நிறுவனமோ தீபாவளி வெளியீடாக ‘லப்பர் பந்து’ படத்தினை திட்டமிட்டு இருக்கிறது. இதனால் ‘சிம்ப்ளி சவுத்’ நிறுவனமும் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துவிட்டது” என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் இன்னும் சில வாரங்கள் திரையரங்கில் ஓட்டி வசூலைக் குவிக்க திட்டமிட்டு இருக்கிறது ‘லப்பர் பந்து’ படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in