

‘எல்.சி.யூ’ படங்களில் உள்ள சிக்கல் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. இந்தப் படத்தில் இருந்து தான் எல்.சி.யூ படங்கள் என்பதை உருவாக்கினார்.
இதற்கு பின்பு வெளியான ‘லியோ’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்கள் இதன் தொடர்ச்சி தான். இப்போதைக்கு எல்.சி.யூ யுனிவர்சில் 3 படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ என தொடர்ச்சியாக படங்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்புக்குரியவை ஆக இருந்தாலும், அதில் இருக்கும் சிக்கல் என்ன என்பதை தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அதில், “நான் இயக்கிய படங்கள் 4 தயாரிப்பு நிறுவனங்களிடம் இருக்கிறது. இன்னுமொரு தயாரிப்பு நிறுவனம், எனது தயாரிப்பு நிறுவனம் என இணைய இருக்கிறது.
நான் இயக்கிய படங்களில் இருந்து ஒரு கதாபாத்திரம் உபயோகிக்க வேண்டுமென்றால் நானே அனைத்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். அதே போல் வெவ்வேறு இசையமைப்பாளர், வெவ்வேறு இசை நிறுவனம் என்றால் தடையில்லா சான்றிதழே அதிகமாக வாங்க வேண்டியதிருக்கும். அதை யாருமே அவ்வளவு எளிதாக கொடுத்துவிட மாட்டார்கள்.
நான் உருவாக்கிய யுனிவர்ஸில் எனக்கே இவ்வளவு சிக்கல் இருக்கிறது என்றால், வேறொரு படத்தில் இருந்து கதாபாத்திரத்தை எடுத்து வந்தால் என்னவாகும். வெவ்வேறு கதாபாத்திரங்களை உள்ளே எடுத்துவர கேட்டார்கள். அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை என கூறிவிட்டேன். இதுவரை 3 படங்கள் முடித்துள்ளேன், 4 படம் தான் இதன் கட்டமைப்பு ஆகையால் அது வெளியாகிவிடட்டும் என்று கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.