

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்டர், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகம் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. 2 நாட்களையும் சேர்த்து படம் தற்போது ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளது. அடுத்து இன்றும் (அக்.12), நாளையும் (அக்.13) விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் ரூ.100 கோடி க்ளப் படங்கள்: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’, தனுஷின் ‘ராயன்’, விஜயின் ‘தி கோட்’, இந்த வரிசையில் தற்போது ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.