குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்க சொல்லிக் கொடுங்கள்: ஆலன் இயக்குநர் யோசனை

குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்க சொல்லிக் கொடுங்கள்: ஆலன் இயக்குநர் யோசனை
Updated on
1 min read

நடிகர் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஆலன்’. ஆர்.சிவா இயக்கியுள்ளார். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். இதன் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் டி.சிவாசிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஆர்.சிவா பேசும்போது, “இந்தப் படத்தில் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களைப் பற்றிப் பேசினேன் என்றால், வாழ்க்கைக்குப் புத்தகம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொண்டதால்தான்.

இதன் படப்பிடிப்புக்காகக் கொடைக்கானல் சென்றிருந்தோம். சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும். ஒருவன் ஓடி வந்து, ‘இது திரைப்படமா?’ எனக் கேட்டான். ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு, ‘நடிக்கிறாயா?’ என்றேன். வில்லனாக நடிக்கிறேன் என்றான். ஏன் என்றபோது, ‘அப்போதுதான் வெட்டலாம், குத்தலாம்' என்றான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். இது பெரிய பாவம் இல்லையா?

நான் நல்ல விஷயத்தைச் சொல்வதற்காக, இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்குசமம். ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றிவிடும். நான் இங்கு நிற்பதற்கும் புத்தகங்கள்தான் காரணம். இப்போது வாசிப்பது குறைந்துவிட்டது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லுங்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in