

சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் (அயோட்டா) வீக்கம் இருந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல், இடையீட்டு சிகிச்சை மூலம் அதை சரிசெய்ய திட்டமிடப்பட்டது.
முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையில் அந்த இடத்தில் ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தினார். இது ஒரு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். திட்டமிட்டபடி, சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நடிகர் ரஜினிகாந்த் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.