Last Updated : 28 Jun, 2018 03:32 PM

 

Published : 28 Jun 2018 03:32 PM
Last Updated : 28 Jun 2018 03:32 PM

பிக் பாஸ் 2: நாள் 10 - பிக் பாஸை எதிர்த்து ஸ்டிரைக் செய்த மும்தாஜ்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் வீட்டில் நேற்று தொடங்கிய புறம் பேசும் படலம் இன்று இன்னும் வீரியமாகி விட்டது என்று சொல்லலாம். மும்தாஜ், மமதி பற்றி குழு குழுவாக சேர்ந்து பேச தொடங்கி விட்டார்கள்.

நேற்று ஆரம்பித்த எஜமான் - வேலைக்காரர் டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. காலை 7.15க்கு எல்லாம் மணி அடித்தது. வேலைக்காரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரத்யேக அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் அனைவரும் தங்கள் எஜமானர்கள் எழுவதற்கு முன்பாகவே எழ வேண்டும்.

பின்னர் வழக்கம்போல 8 மணிக்கு பாடல் ஒலித்ததும் ஆண்கள் எழுந்தனர்.

மும்தாஜ் ஸ்டிரைக்

காலையில் முதல்வேலையாக பிரச்சனையை ஆரம்பித்தார் மும்தாஜ். தான் உடை மாற்றுவதற்காக பெண்கள் அறையில் இருக்கும் பாத்ரூமை திறக்க வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பிக்பாஸ் தன்னை அழைத்து பேசவில்லையென்றால் மைக்கை அணியமாட்டேன் கழற்றி வைத்து விட்டார். மைக்கை அணியும்படி பிக்பாஸ் கூறியும் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.

கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த மமதியிடம் “எத்தனை இட்லி நாங்கள் சாப்பிடலாம்” என்று பொன்னம்பலம் கேட்டார்.

10 நிமிஷத்தில் பதில் கூறுகிறேன் என்று மமதி சொன்னதும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

உடனே மமதி அருகில் இருந்த ஜனனியிடம் “எப்படி உங்க முதலாளியை சமாளிக்கிறீர்கள். உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்” என்று கூறினார். இது பொன்னம்பலத்தின் காதில் விழுந்து விட்டது. “அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம். அப்படி யார் இங்கு கொடுமைப்படுத்தினார்கள்?” என்று மமதியிடம் கடிந்து கொண்டார் பொன்னம்பலம்.

காலையில் வேலை செய்யாமல் 2 மணி நேரத்தை வீணடித்து விட்டதால் மும்தாஜுக்கும், பொன்னம்பலத்தை பற்றி அவதூறாக பேசியதால் மமதிக்கும் தண்டனை கொடுக்க முடிவு செய்தது ஆண்கள் தரப்பு.

2 மணி நேரத்தை வீணடித்து விட்டதால் மும்தாஜ் வெயிலில் 2 மணி நேரம் நின்று நீச்சல் குளத்தை சுத்தம் செய்யவேண்டும். மமதி நாள் முழுவதும் பேசாமல் இருக்க வேண்டும் (சரியான தண்டனை.. இழுத்து இழுத்து பேசும் மமதியிடம் இருந்து தப்பித்ததாக பிக் பாஸே பூரித்து போயிருப்பார்).

ஆனால் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டிப்பாக மறுத்து விட்டார் மும்தாஜ். மகன் என்று சொன்ன ஷாரிக் மும்தாஜ் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறினார். “முடியாது கட்டாயம் செய்ய முடியாது” என்று மறுத்துவிட்டார் மும்தாஜ்.

மமதியோ தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

அடுத்த தன் பங்குக்கு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தார் வைஷ்ணவி “அடிமைகள் வேறு உதவியாளர்கள் வேறு. எந்த வீட்டிலும் உதவியாளர்கள் ஊட்டி விடுவது, தலை துடைத்து விடுவது, டான்ஸ் ஆடுவது எல்லாம் செய்ய மாட்டார்கள்” என்று கூறினார் (கரெக்ட்டுதானே).

ஆனால் வைஷ்ணவியின் கருத்துக்கு ஐஸ்வர்யா, யாஷிகா, ரித்விகா ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது வாய்ஸ் எடுபடவில்லை. (அதானே.. பெண்களுக்கு பெண்கள்தானே எதிரி).

நீண்ட நேரம் நடந்த விவாதத்துக்கு பிறகு அனைவரையும் அழைத்த பிக் பாஸ் தலைவி நித்யாவின் மூலம் ஒரு விளக்கத்தை வெளியிட்டார்.

அதில் “பெண்கள் அரையில் இருக்கும் அந்த கழிவறை எமெர்ஜென்ஸிக்காக மட்டுமே. அது எப்போதும் திறக்கப்படாது. அனைவரும் கட்டாயம் மைக்கை அணிய வேண்டும். மீறினால் வீட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிறகு நித்யாவுக்கும், வைஷ்ணவிக்கும் சர்க்கரையால் ஏற்பட்ட  ஒரு பஞ்சாயத்தை பற்றி வைஷ்ணவி பாலாஜியிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் நித்யாவை அழைத்த பாலாஜி “நீ இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உஷாரா இருந்துக்க..” என்று எச்சரித்தார்.

அனைவரையும் அழைத்த பிக்பாஸ் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் அதில் “வேலைக்காரர்கள் தங்கள் எஜமானர்களை நாடனம் ஆடியும் பாடல்கள் பாடியும் மகிழ்விக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

வீட்டின் வெளியே ஒரு மேடையும் அதை சுற்றி சில இருக்கைக்கைளும் அமைக்கப்பட்டிருந்தது.

இருக்கைகளில் ஆண்கள் சாய்ந்து கொண்டிருக்க நடுவில் இருந்த மேடையில் ஒவ்வொருவராக வந்து தங்கள் திறமைகளை (?) காட்டினார்கள்.

முதலில் வந்தவர் ரம்யா.. தொழில்முறை பாடகர் என்பதால் நன்றாகவே பாடிவிட்டு சென்றார். அடுத்து வந்தவர் ஐஸ்வர்யா. தன் வழக்கமான மழலை ஸ்லாங்கில் ‘எனை மாற்றும் காதலே’ பாடலை பாடி அனந்த் வைத்தியநாதனிடமிருந்து ஆப்பிளை பெற்று சென்றார். அடுத்து மும்தாஜும் நித்யாவும் ஒரு பாடலுக்கு ஆடினார்கள்.

பின்னர் பாடல் என்ற பெயரில் வசனம் பேசினார் மமதி. ஆனந்த் வைத்தியநாதனே மிரண்டு போகும் அளவுக்கு விதவிதமான பாடல்கள் என்று அவர் பாடியதற்கு எப்படி முகத்தில் எந்த அதிருப்தியும் காண்பிக்காமல் இருப்பது என்பதில் பாலாஜி, மகத், சென்றாயன் உள்ளிட்டோர் மிக கஷ்டப்பட்டனர்.

அடுத்து வந்தவர்கள் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும். ’கோடான கோடி’ பாடலுக்கு அவர்கள் ஆடியது ஆபாசத்தின் உச்சம். ஒரிஜினல் பாடலில் கூட இத்தனை ஆபாச அசைவுகள் இல்லை என்னும் அளவுக்கு மோசமாக இருந்தது இருவரின் நடனமும். போன சீசனில் வார்த்தைக்கு வார்த்தை இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கிறார்கள் என்று கூறிய கமல் இதற்கு என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே அவரை எதிர்த்து முதன்முறையாக ஸ்ட்ரைக் செய்த மும்தாஜுக்கு கமல் என்ன புத்தி சொல்லப் போகிறார் என்பதையும் சனிக்கிழமை பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x