

சன் டிவியில் கடந்த மே மாதத்தில் இருந்து டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதன் கிராண்ட் பினாலே கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத்தும் குணசித்திர நடிகை ‘பருத்திவீரன்’ சுஜாதாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுபற்றி சுஜாதா கூறும்போது, “நான் மதுரையில் இருந்து கொண்டு படங்களில் நடித்து வருகிறேன். டிவி ரியாலிட்டி ஷோவுக்கு நிறைய அழைப்பு வந்தது. பிக் பாஸுக்கு கூட அழைத்தார்கள். தேதிகள் சரியாக அமையாததால் மறுத்துவிட்டேன். ‘டாப் குக்கு டூப் குக்கு’ சமையல் நிகழ்ச்சி என்பதால் தயக்கத்துடன் கலந்துகொண்டேன். இப்போது டைட்டிலை வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் முழுமையாகக் கலந்துகொண்டதும் சந்தோஷமாக இருக்கிறது. நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பம் போலவே உணர்ந்தோம். நான் நடித்த ‘கோலிசோடா’ வெப்சீரீஸ் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்து 2 படம் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.