‘புலிப்பார்வை’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் பிரவீன்காந்தி அறிக்கை

‘புலிப்பார்வை’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் பிரவீன்காந்தி அறிக்கை
Updated on
1 min read

‘புலிப்பார்வை’ படத்தில் சர்ச்சைக் குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று அப்படத்தின் இயக்குநர் பிரவீன்காந்தி கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘புலிப்பார்வை’ என்ற படத்தை பிரவீன்காந்தி இயக்கி வருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான காட்சிகள் இப்படத்தில் இருப்ப தாகவும், சில காட்சிகளில் பாலசந்திரன் ராணுவ சீருடையில் இருப்பதாகவும் கூறி சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், ‘புலிப்பார்வை’ படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது பிரபாகரனின் இரண்டாவது மகன் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சேனல்- 4 என்ற லண்டன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளி யிட்டது. இதற்கு ஆதாரமாக சில புகைப் படங்களையும் வீடியோ வையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டது. அதைக் கண்டு உலகநாடுகள் அதிர்ந்தது. அந்த கொடிய சம்பவத்தையும் பாலச்சந்திரனையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘புலிப்பார்வை’.

மாவீரனின் மகனை வீரனாக காட்டவும், பாலாவின் வீரத்தின் மூலம் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புகழை இந்த உலகம் போற்ற வும்தான் இப்படத்தில் பாலா விற்கு சீருடை வழங்கப்பட்டது. ஆனால், பாலாவை சீருடையில் காட்டுவதன்மூலம் அவரை இளம் போராளியாக சித்தரித்ததாக சிலருக்கு எண்ணம் எழுந்துள்ளது.

இப்படத்தை பார்த்த பின் சீமான், நெடுமாறன் ஆகியோரின் கருத்துப்படி படத்தில் பாலாவின் சீருடையை மாற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் அனைத்து தமிழ் அமைப்புகளின் கருத்துக்கும் தலைவணங்கி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மதன் இதுபற்றி கூறும்போது, “தமிழ் ஆர்வலர்களுக்கு படத்தை முழுமையாக திரை யிட்டு காட்டி, அவர்களது ஆதரவோடு திரையிடப்படும். அவர் களுக்கு பிடிக்கவில்லை என்றால் எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டாலும் படத்தை திரையிட மாட்டோம். படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஏற்பட்ட அடிதடி சம்பவத்துக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in