“எஸ்.பி.பி சாலை என பெயர் வைத்த முதல்வருக்கு நன்றி” - இளையராஜா

இளையராஜா - மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
இளையராஜா - மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated on
1 min read

சென்னை: “எஸ்.பி.பி வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உரித்தாகட்டும்” என தெரிவித்தார்.

மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு திரையுலகினர் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in