Last Updated : 26 Jun, 2018 03:44 PM

 

Published : 26 Jun 2018 03:44 PM
Last Updated : 26 Jun 2018 03:44 PM

பிக் பாஸ் 2: நாள் 8 - ‘பிக் பாஸ் சந்தை’

பிக் பாஸ் சீசன் 2 ஆரம்பித்த இந்த 7 நாட்களில் இன்று ஒவ்வொருவரின் உண்மை முகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.

கிச்சனில் நின்று கொண்டிருந்த பாலாஜியை திடீரென்று கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ் “ இந்த பிக் பாஸ் வீட்டில் யார் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மமதி பேரை சொன்ன பாலாஜி அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

அதாவது மமதி மும்தாஜுடன் சேர்ந்து புறம் பேசுவதாகவும், அவரின் நடவடிக்கைகள் செயற்கையாக உள்ளதாகவும் கூறினார்.

அதே போல ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்த பிக் பாஸ் அவர்களிடமும் வீட்டில் யார் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டறிந்தார். எதிர்பார்த்தது போலவே ஒரிருவரை தவிர மற்ற அனைவரும் நித்யா பெயரையே கூறினர்.

பின்னர் பாலாஜி, நித்யா, சென்றாயன் மூவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது பாலாஜி ‘இப்படியா வேலைக்காரி மாதிரி வேலை வாங்குறது?” என்று கூற அதை கேட்ட நித்யா கண் கலங்கினார்.

இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் பெண்கள் அறைக்கு சென்ற மஹத்,  யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடுவே படுத்துக் கொண்டார். தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட பாலாஜி அறைக்குள் வந்து “என்னடா பண்ணிட்டுருக்க? மோசமான ஆளா இருக்கியே” என்று மஹத்தை அங்கிருந்து கிளப்பப் பார்த்தார்.

சற்று நேரம் கழித்து இரவு பிசைந்து வைத்த சப்பாத்தி மாவை எலிகளிடமிருந்து காப்பாற்ற எண்ணி நித்யாவின் கட்டிலுக்கு அருகே இருந்த மேஜை மேலே வைத்தார் மமதி.  அவ்வளவுதான் தொடங்கியது அடுத்த பிரச்சனை.

”இதை ஏன் இங்க வச்சிருக்கீங்க.. மும்தாஜ் வெளியில வைக்க சொன்னாங்க” என்று தொடங்கினார் நித்யா.

அதற்கு மமதி “வீட்டில் எலி இருக்கிறது. அது வாய் வைத்து விட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்படும். அதனால்தான் இங்கே எடுத்து வந்தேன்” என்று கூறினார்.

இந்த வாக்குவாதம் சிறிது நேரம் நீடித்தது. ஒரு கட்டத்தில் மமதி  “உங்களுக்கு இந்த வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான்தான் உங்களோடு நிற்கிறேன். என்னிடம் இப்படி கடுமையாக பேச வேண்டாம்” என்று கூறினார்.

ஒரு வழியாக அதற்கு நன்றி சொல்லி வாக்குவாதத்தை முடித்து வைத்தார் நித்யா.

 

8ஆம் நாள் காலை மேயாத மான் படத்தின் 'என் வீட்டு குத்துவெளக்கு நீ கிடைச்சா என் வாழ்க்கை கெத்து’என்ற பாடலுடன் தொடங்கியது.

பாடல் முடிந்த பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி. வீட்டில் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் மாயமாகிப் போயிருந்தன. கேஸ். ஓவன் உட்பட அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.

பிறகு அனைவரையும் அழைத்த பிக்பாஸ் “இது ஒரு டாஸ்க் என்றும் இதன் மூலம் வீட்டில் உள்ள ஆண்கள் திறமையானவர்களா அல்லது பெண்களா” என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

வீட்டில் உள்ளவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.4000 கொடுக்கப்படும். அதை வைத்து அவர்கள் ஷாப்பிங் செய்து கொள்ள வேண்டும். யார் சிக்கனமாகவும்,  அதே சமயம் அன்றைக்கு சமையலுக்கு தேவையான பொருட்களையும் திறமையாக ஷாப்பிங் செய்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

ஆண்கள் அணியில் சென்றாயனும் டேனியலும,் பெண்கள் அணியில் மும்தாஜும் மமதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஸ்டோரில் ரூமில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்ட ஆண்கள் அணி இதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்த ’பிக் பாஸ் சந்தை’க்கு சென்றது. தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கிய பின் டேனியலும் சென்றாயனும் வெளியே வந்தனர்.

அதன் பின்னர் பெண்கள் அணி உள்ளே சென்றது. விதிமுறைப்படி ஆண்கள் என்னென்ன பொருட்களை வாங்கினார்கள் என்பது பெண்கள் அணிக்கு தெரியாது.

பிக் பாஸ் அறிவுரைப்படி இரு அணியின் பொருட்களையும் வீட்டில் உள்ளவர்கள் தரம் பிரித்து எந்த அணியின் பொருட்கள் வீட்டிற்கு தேவையானதாக இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்ற அணி என்று அறிவிக்க வேண்டும்.

அதன்படி வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சிறப்பாக வாங்கியதால் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இன்று கிட்டத்தட்ட வீட்டில் உள்ள அனைவருமே மும்தாஜையும் மமதியையும் பற்றி பேசத்தொடங்கி விட்டனர்.

“உடம்பு முடியலன்னா ஏன் இங்கு வரணும்” என்று மும்தாஜை பற்றி வைஷ்ணவியும், “மும்தாஜ் நல்லவங்க தான்.  கூட இருக்குற சுத்த தமிழு (மமதி) தான் ஏத்தி விடுறது” என்று பாலாஜியும் பேசினார்கள்.

மீண்டும் அனைவரையும் அழைத்த பிக்பாஸ் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரமிது என்று கூறினார். அப்போது நாம் உட்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் யார் தெர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த நித்யாவையே வீட்டின் தலைவராக அறிவித்து ட்விஸ்ட் வைத்தார் பிக் பாஸ். அதன்படி இந்த வாரம் யாரும் நித்யாவை எலிமினேஷனுக்கு பரிந்துரைக்க முடியாது.

இதில் ஒரு தந்திரம் உள்ளது. எலிமினேஷனுக்கு எப்படியும் வீட்டில் உள்ள அனைவரும் நித்யாவையே தெர்ந்தெடுப்பார்கள். ஓட்டுக்களும் நித்யாவுக்கு எதிராகவே விழ வாய்ப்புள்ளது. நித்யா போய்விட்டால் வீட்டில் பிரச்சனை நடக்க வாய்ப்பு குறைவு. சண்டை இல்லையென்றால் மக்கள் ஆர்வமாக பார்க்கமாட்டார்கள். அதனால் இப்படி ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறது பிக் பாஸ் குழு.

பின்னர் ஹாலில் “இசை எங்கிருந்து வருது என்று டேனியல் கேட்க அதற்கு பாலாஜி “தூக்கத்திலிருந்து” என்று பதில் சொல்லவும் டென்ஷனாகி விட்டார் அனந்த் வைத்யநாதன். “என் தொழில் பற்றி பேசாதே என்று பலமுறை சொல்லிருக்கேன். ஜோக் என்றாலும் ஒரு லிமிட் இருக்கு” என்று சற்று கடுமையாகவே கூறி விட்டார்.

அடுத்து எலிமினேஷன் நாமினேஷனுக்காக அனைவரையும் அழைத்தார் பிக்பாஸ். ஒவ்வொருவராக உள்ளே சென்று வழக்கம் போல பெயர்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.

நித்யா பெயரை சொல்லமுடியாததால் இந்த முறை அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட பெயர் மமதி, அடுத்ததாக அதிக வோட்டு பெற்றவர் மும்தாஜ். அதற்கு அடுத்ததாக பொன்னம்பலமும் அனந்தும் நாமினேஷனில் இடம்பிடித்தார்கள். பொன்னம்பலம் அதிகம் தகாத வார்த்தைகளை பேசுவதாக காரணம் சொல்லப்பட்டது.

இரவானதும் வீட்டிற்கு வெளியே மும்தாஜ் தொழுது கொண்டிருக்க விளக்குகள் அணைக்கப்பட்டது. உள்ளே உள்ளவர்களில் ஒரு குழு தம்மடிக்க செல்ல தயாராவதோடு இன்றைய நாள் முடிந்தது.

(தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x