

சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் கதாபாத்திர அறிமுகங்களை சிறிய வீடியோக்களாக கட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தில் நடிகை ரித்திகா சிங் ‘ரூபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவில், கையில் துப்பாக்கியுடன், பேண்ட், சட்டை உடையலங்காரத்தில் வலம் வருகிறார். காவல் துறை அதிகாரியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவருக்கென ஆக்ஷன் காட்சிகள் இருப்பதையும் வீடியோ உணர்த்துகிறது. அவரது தோற்றம் மாஸாக உள்ளது. அதேபோல நடிகை துஷாரா விஜயன் ‘சரண்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கான வீடியோவை பொறுத்தவரையில், ஆசிரியராக இருப்பார் என்பதை காட்சிகள் உறுதி செய்கின்றன.
மாணவர்களுடன் உரையாடுவது, அவருக்கு பின்னால் இருக்கும் பள்ளி கட்டிடம் ஆகியவை உறுதி செய்கின்றன. சிரித்த முகத்துடன் வலம் வருகிறார். சில இடங்களில் கோபம் கொள்கிறார். அடுத்து மஞ்சுவாரியரை பொறுத்தவரை அவர் ரஜினியின் மனைவியாக நடிப்பதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினி, அமிதாப் பச்சன் ஆகியோருடன் அவருக்கான காட்சிகள் இருக்கின்றன. மேலும் எப்போதும் புன்னை பூத்த முகத்துடன் இருக்கும் கதாபாத்திரம் போல தெரிகிறது. மிரட்டலான நடனத்தால் அண்மையில் வெளியான ‘மனசிலாயோ’ பாடலில் கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.