

திரையில் ஆண் அழுகைக்கு கண்ணியம் தந்தவர், ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் என்று அவருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "நகைச்சுவையாளர்கள் அனைவருமே சமூக விமர்சகர்கள்தான். தங்களது கோபத்தை, நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக் கொள்கின்றனர். ஆனால், தொடர்ந்து அப்படியான வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால், அது மன அழுத்ததில் முடியும்.
நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு, எளிதாக அழுவதே. இதை அவரது திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம். 60-களில் அவரால் அமெரிக்க சினிமாவில் நாயகனாக பரிமளித்திருக்க முடியாது. ஏனென்றால், அந்தக் காலத்தின் நாயகர்கள் யாரும் திரையில் அழுவதற்கு துணிந்ததில்லை. வியட்நாம் போர்தான் அமெரிக்காவின் இந்த மனோபாவத்தை மாற்றியது.
திரையில் கூச்சலிட்டும், பீதியில் அழுவதையும் செய்த முதல் ஆக்ஷன் ஹீரோ ராம்போ. ஆனால், ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கு ஒரு கண்ணியத்தை எடுத்து வந்தார். அவரது திறமைக்காக நான் அவரை ரசித்தேன்.
ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மையென தெரியவந்தால், தனது வாழ்நாள் முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதற்காக அதற்காக நான் அவரை வெறுக்கிறேன்.
இப்படி வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும் குணம், கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று. எனது இந்திய ஆதர்ச படைப்பாளி குரு தத்-துக்கும் இது பொருந்தும்" என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த 'அவ்வை சண்முகி'க்கு தூண்டுகோலாக அமைந்தது, ராபின் வில்லியம்ஸின் 'மிசஸ் டவுட் ஃபயர்' என்பதும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.-சின் அசலான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தின் மூலக்கதைக்கு துணை புரிந்தது, ராபின் வில்லியம்ஸின் 'பேட்ச் ஆடம்ஸ்' என்பதும் குறிப்பிடத்தக்கது.