திரை விமர்சனம்: ரகு தாத்தா

திரை விமர்சனம்: ரகு தாத்தா
Updated on
2 min read

மெட்ராஸ் வங்கியில் பணியாற்றும், வள்ளுவன் பேட்டையைச் சேர்ந்த கயல்விழி (கீர்த்தி சுரேஷ்), முற்போக்குக் கதைகளை எழுதிவருகிறார். தனது தாத்தா ரகோத்தமனுக்கு (எம்.எஸ்.பாஸ்கர்) புற்றுநோய் இருப்பது தெரியவர, அவருக்காகத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. திருமணத்தில் விருப்பமில்லாத கயல்விழிக்கு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளைப் பிடிக்காததால், தனது கதைகளை விரும்பும் 'முற்போக்கு' நண்பர் தமிழ் செல்வனை (ரவீந்திர விஜய்) திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஒருகட்டத்தில் அவரின் சுயரூபம் தெரியவர, திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் கயலுக்கு. இதற்கிடையே இந்திக்கு எதிராகப் போராடும் அவருக்கு அதைக் கற்கவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல் எப்படித் தீர்கிறது என்பதுதான் கதை.

1970-களின் ஆரம்பத்தில் நடக்கிறது, கதை. இந்தி திணிப்பு மற்றும் பெண்ணியம் பேசும் கதையில் சின்ன சின்ன ஒன்லைனர்கள் மற்றும் சுவாரஸ்யமான காட்சி அமைப்புகளால் கவர்கிறார், இயக்குநர் சுமன் குமார். அவரது திரைக்கதை சில இடங்களில்ரசிக்க வைக்கிறது. இந்தி, பெண்ணியம் என இரண்டு டிராக்கிலும் மேம்போக்காகவே செல்வதால் அழுத்தமின்றி கடக்கிறது கதை.

இருந்தாலும் காமெடிகளால் அதை மறக்கடிக்க முயற்சிக்கிறது படம். கயல்விழியின் திருமணத்துக்கு மட்டுமே இரண்டாம் பாதி திரைக்கதை முக்கியத்துவம் கொடுப்பதால் மற்றவிஷயங்கள், சிக்னலுக்கு காத்திருக்கும் வாகனங்கள் போல அப்படி அப்படி ஆங்காங்கே நிற்கின்றன. குடும்பம், தாத்தாவுக்குப் புற்றுநோய், தங்கைக்கு முன் அண்ணன் திருமணம் செய்வது என ஒரு கட்டத்தில் படம் நாடகமாக மாறினாலும் இனிமையான 'ஃபீல்குட்' உணர்வை தந்துவிடுகிறது கடைசி அரைமணி நேரக் காட்சிகள்.

அதற்குக் கீர்த்தி சுரேஷின் தேர்ந்த நடிப்பும் காரணம். அவர் காட்டும் ஒவ்வொரு 'எக்ஸ்பிரஷனு'ம் ரசித்து நினைக்கவும் நினைத்து ரசிக்கவும் வைக்கின்றன. ‘பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா என்னால இருக்க முடியாது’என்று அம்மாவிடம் காட்டும் செல்ல கோபம், 'தூக்குல தொங்கிருவேன்' என்று பம்
மாத்துக் காட்டும் அப்பாவிடம், 'யோவ், மண்டைய உடைச்சிருவேன்' என்பது, தப்புத்தப்பாக தமிழ்ப் பேசும் இந்தி அதிகாரியிடம் எரிந்துவிழுவது, வருங்கால கணவனின் 'போலி பெண்ணியம்' தெரிந்ததும் உடைவது என கீர்த்தியின் நடிப்பில் செம வெரைட்டி.

'முற்போக்கு' வாசகனாக அறிமுகமாகி கயலின் மனதில் இடம்பிடிக்கும் ரவீந்திர விஜய், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தாத்தா எம்.எஸ்.பாஸ்கர், தோழி தேவதர்ஷினி, அண்ணன் ஆனந்த்சாமி, அவர் மனைவி இஸ்மத் பானு உட்பட துணை நடிகர்கள் குறையற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஆணாதிக்க சிந்தனை, இந்தி திணிப்பு விஷயங்கள் இப்போதும் தொடர்வதால், மனோஜ்குமாரின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

பீரியட் கதைக்கான உணர்வை சுகமாகத் தருகிறது யாமினி யக்ஞமூர்த்தியின் உயிரோட்டமான ஒளிப்பதிவு. ஷான் ரோல்டன் இசையிலும் வரிகளிலும் ‘அருகே வாகண்மணியே’ சுகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார். சிறு சிறு குறைகள் இருந்தாலும் இந்த 'ரகு தாத்தா'வை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in