

ஆமிர்கான் நடித்துவரும் 'பி.கே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், இந்திய அளவில் சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ நிர்வாண கோலத்தில் காட்சியளித்த ஆமீர்கான் போஸ்டருக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.
ஏற்கெனவே ஆமிர்கானுடன் 'ரங் தே பஸந்தி' படத்தில் நடித்த சித்தார்த்திடம் இது குறித்து கேட்ட போது, " 'படத்தை பார்த்துவிட்டு அந்த போஸ்டருக்கும் படத்துக்கும் சம்பந்தம் என்னனு தெரிஞ்சிக்கணும்'னு எதிர்ப்பு தெரிவித்த எல்லாரையும் மதித்து ஆமிர்கான் சொல்லியிருக்கார்.
ஒரு படத்தின் போஸ்டரை வைத்தே, எந்த ஒரு கருத்தையும் சொல்லிவிடக் கூடாது. ஆபாசம்னு பார்த்தால், ஒலிம்பிக்கில் நீச்சல் உடையில்தான் நீந்துகிறார்கள். நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஆப்பிரிக்காவில் வாழ்பவர்களை காண்பித்தால் அவங்க நிர்வாணமாகதான் இருப்பார்கள். இதைப் பார்த்து குழந்தைகள் துணியை கழட்டிட்டு ஓடப் போறாங்களா? கருத்து சுதந்திரம் என்பது இதில் ரொம்ப முக்கியம். இது ஒரு கலை சார்ந்தது" என்றார்.
"ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு நாட்டை காப்பாற்றி விட முடியாது. நானும் சினிமாவுக்கு நாட்டை திருத்துறவதற்காக வரவில்லை. இந்த உலகத்துல எதை வேண்டுமானாலும் குறைக்கப் பார்க்கலாம், ஆனால் கருத்து சுதந்திரத்தை மட்டும் பறிக்க நினைக்கக் கூடாது. அதைச் செதுக்கினாலும் சரி, வெட்டினாலும் சரி அது பறிபோயிடும். அப்புறம் யாருமே சினிமாவே எடுக்க முடியாது.
ஒரு கலைஞனுக்கு, கதாசிரியருக்கு எப்பவுமே கருத்து சுதந்திரம் முக்கியம், சினிமாவோட அடித்தளமே அதுதான். இன்றைக்கு ஒருத்தர் ஒரு விஷயம் சொல்றார்... அதை ஒருத்தர் எதிர்க்கும்போது, சில நாட்களில் யாராலும் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடும்" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார் சித்தார்த்.