“என் தவறுக்கு வருந்துகிறேன்" - சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு சுதா கொங்கரா விளக்கம்

இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா
Updated on
1 min read

சென்னை: சாவர்க்கர் குறித்த தனது பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுதா கொங்குரா அண்மையில் அளித்தப் பேட்டியில், “நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். திருமணத்துக்குப் பின்னர் அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அந்த பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத் தான் பிடித்து இருந்தது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். அவங்க படிக்கப் போகும் போது, அந்தத் தெருவில் உள்ளவர்கள் அவர்களை கேலி செய்ததால்,. அந்த அம்மா அழுது கொண்டு, பள்ளிக்கு போகமாட்டேன் எனச் சொல்வார்கள். அப்போது சாவர்க்கர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிக்க வைக்கச் செய்தார். இது சரியா தப்பா. அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தது” என்று பேசி இருந்தார்.

அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சுதா கொங்குராவுக்கு எதிராக இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.

அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in