விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை

விஷால் படங்களைத் தயாரிப்போருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிபந்தனை
Updated on
1 min read

சென்னை: “நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும்” என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: “கடந்த 2017- 2019 ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது. 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி (Special Officer) சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு ஸ்பெஷல் ஆடிட்டரை நியமித்தார்.

அந்த ஸ்பெஷல் ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்போது சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடியே 50 லட்சம் மற்றும் 2017 - 2019 ஆண்டுகளில் வரவு - செலவு ரூ.5-கோடியும் சேர்த்து சுமார் ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்துக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று விஷால் அவர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in