‘சர்தார் 2’ படப்பிடிப்பில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு

‘சர்தார் 2’ படப்பிடிப்பில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து சண்டைப் பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த அடிபட்டுள்ளது.

உடனடியாக படக்குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏழுமலையை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏழுமலை சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in