

சென்னை: தன் மகன் சினிமாவுக்குள் வருவது குறித்து தான் கற்பனை செய்யவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஃபீனிக்ஸ் வீழான்’. இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: “என் மகன் திரைத்துறைக்குள் வந்தது எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்தபிறகு அனல் அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்து கதை சொன்னார். இதை நான் துளியும் கற்பனை செய்யவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கஷ்டம்.
நான் அனுபவித்த அழுத்தங்கள் என் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதரின் மூலமாக அவன் அறிமுகம் ஆகிறான்.
என் மகன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடியிருக்கிறேன். ஆனால் இதுதான் எனக்கு மிகச்சிறந்த தந்தையர் தினம்” இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.