‘பிதா’ மூலம் கதாநாயகன் ஆன தயாரிப்பாளர்

மதியழகன்
மதியழகன்
Updated on
1 min read

தயாரிப்பாளர் மதியழகன் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பிதா’. இதை ஸ்ரீனிக் புரொடக்‌ஷன் சார்பில் டி.பாலசுப்பிரமணி, சி.சதீஷ்குமார் தயாரிக்கின்றனர். கார்த்திக் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார். பிராங்க்ளின் ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். வனிதா விஜயகுமார், சரவண சுப்பையா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த த்ரில்லர் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் நாஞ்சில் சம்பத், திருமுருகன் காந்தி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் சரண், தயாரிப்பாளர் தனஞ்செயன், லஷ்மி ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கார்த்திக் குமார் கூறும்போது, “தயாரிப்பாளர் மதியழகன், பத்து பன்னிரண்டு படங்களைத் தயாரித்து, திரைத்துறைதான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார். தொடர்ந்து படங்கள் செய்கிறார். இதில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் சிறந்த திறமை இருக்கிறது. அது இந்தப்படத்தில் முழுமையாக வெளிப்படும். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தை இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்துள்ளோம்” என்றார்.

நாஞ்சில் சம்பத் பேசும்போது, “பல படங்கள் சென்சார் பிரச்சினைகளில் சிக்கிக் கிடக்கின்றன. நான் நடித்த ஒரு படத்தின் பெயர் ‘சேகுவாரா’. அதில் என் பெயர் அண்ணாதுரை. அந்தப் பெயர் வரக்கூடாது என்கிறார்கள்.

சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை. நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட, இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி இயக்குநர் கார்த்திக் நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in