“பேசி தீர்க்கப்பட்டுவிட்டது” - ரெட்கார்டு விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம் 

“பேசி தீர்க்கப்பட்டுவிட்டது” - ரெட்கார்டு விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம் 
Updated on
1 min read

சென்னை: “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வெளியில் அது போன்ற தகவல்கள் வருகிறது. சிறிய பிரச்சினைகள் இருந்தது. அது பேசி தீர்த்தாகிவிட்டது” என ரெட்கார்டு விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது ‘இந்தியன் 2’ படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.

அடுத்து என்னுடைய நடிப்பில் ‘எஸ்டிஆர்48’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த உலகத்தில் அதிகம் கஷ்டப்படும் ஒரே ஆள் யார் என்றால் உண்மையைப் பேசுபவன் மட்டுமே. அதிலும் குறிப்பாக நான் நிறைய பேசியிருக்கிறேன்” என்றார்.

வாக்களிக்க ஏன் வரவில்லை என கேட்டதற்கு, “படப்பிடிப்பில் இருந்தேன். அதனால் வர முடியவில்லை. வராதது தவறான விஷயம் தான். படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அதையும் பார்க்க வேண்டியுள்ளது. இருப்பினும் வர முடியவில்லை என்பது கஷ்டமாகத்தான் உள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட்கார்டு போடப்படுவதாக கூறப்படுகிறதே? என கேட்டதற்கு, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வெளியில் அது போன்ற தகவல்கள் வருகிறது. சிறிய பிரச்சினைகள் இருந்தது. அது பேசி தீர்த்தாகிவிட்டது” என்றார்.

ரெட்கார்டு விவகாரம்: ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்த படம் ‘கொரோனா குமார்’. இதில் நடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் சிம்பு பிஸியாக இருக்கிறார் எனவும், இந்தப் படத்தை எங்களுக்கு அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். இதனால், சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா என்ற விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சிம்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in