Published : 03 Jun 2024 08:54 AM
Last Updated : 03 Jun 2024 08:54 AM

திரை விமர்சனம்: தி அக்காலி

போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்). கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகக் கிடைக்கும் தகவலை அடுத்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அவர்கள் யார், எதற்காக அந்த வழிபாடு, அவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைப் புரிந்தும் புரியாமலும் சுற்றி வளைத்துச் சொல்கிறது படம்.

நம்பிக்கைகளின் அடிப்படையில் மனித குழுக்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கையாண்டு வருகின்றன. சாத்தானை வழிபடும் குழுக்களைப் பற்றியும் அதிகாரத் தைப் பெறுவதற்கான அவர்களின் கொடூரச் செயல்களையும் இந்த ஹாரர் த்ரில்லரில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் முகமது ஆசிப் ஹமீது.

உலகம் முழுவதும் அமானுஷ்யமான முறையில் உயிரிழப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரத்துடன் தொடங்கும் படம், மலையாளத்தில் வெளியான ‘ஆடம் ஜான்’ உள்ளிட்ட சில படங்களை ஞாபகப்படுத்துகின்றன. முன் பின்னாக நகரும் திரைக்கதை முதல் பாதியில் குழப்பத்தை அதிகரிக்கிறது. எதற்காக இந்த அமானுஷ்யம், சாத்தான் வழிபாடு போன்ற விஷயங்கள் என விரியும்போது த்ரில்லருக்கான உணர்வைத் தருகிறது.

கதைக்குள் நாசர் வந்த பிறகு பதற்றம் ஏற்பட்டாலும் கடைசி அரைமணிநேரம்தான் கதை என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பைப் பார்வையாளர்களுக்குத் தருகிறது படம். செபாஸ்டியன் யார் என்கிற ட்விஸ்ட் சுவாரஸ்யம். ‘அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவன் என்றும் வெவ்வேறு மொழியில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை என்றும் விளக்கி அடுத்த பாகத்துக்கும் லீட் கொடுத்திருக்கிறார்கள்.

இயல்பான போலீஸ் அதிகாரியாக ஜெயக்குமார் சிறந்த நடிப்பை வழங்குகிறார். சின்ன கதாபாத்திரம் என்றாலும் அனுபவ நடிப்பால் ஊதிவிட்டுச் செல்கிறார், 'தலைவாசல்' விஜய். கொஞ்ச நேரம் வந்தாலும் வினோத் கிஷண் கவனிக்க வைக்கிறார். ஸ்வயம் சித்தா, வினோதினி எனத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் இருட்டில்தான் காட்சிகள் என்பதால் கிரி முர்பியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த அமானுஷ்ய உலகத்துக்குள் இழுத்துச் செல்கிறது. அனிஷ் மோகனின் இசை, த்ரில்லருக்கானப் பணியைச் செய்திருக்கிறது. தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் சாத்தான் வழிபாட்டுக் கூட அரங்கம் மிரட்டல். படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன், அந்த சேஸிங் சண்டைக்காட்சி உட்பட நீளமான பல காட்சிகளில் தாராளமாகக் கத்திரி வைத்திருக்கலாம்.

கதையில் நுணுக்கமான விஷயங்கள் பின்னப்பட்டிருக்கின்றன. ஆனால், அதைப் புரிந்துகொள்வதுதான் சிக்கலாக இருக்கிறது. தெளிவாகச் சொல்லியிருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x