

சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உட்பட பலர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற படம், அரண்மனை 4. இந்தப் படம் இந்தியில் நேற்று வெளியாகியுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
இதில் ராஷி கன்னா பேசும்போது, ‘‘தமிழில் இதற்கு முன் நான் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’ படங்கள் வெற்றி பெற்றன. ‘அரண்மனை 4’ படமும் வெற்றி பெற்றுள்ளதால் இது எனக்கு ஹாட்ரிக் வெற்றி என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். சிறுவயதில் இருந்தே ஹாரர் படங்கள் பிடிக்கும் என்பதால் ‘அரண்மனை 4’ படத்தில் நடித்தது பெருமையாக இருந்தது. ஹாரர் படங்களில் நடிப்பது எளிது. ஆனால், இயக்கம் கடினமானது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறேன்.
மொழி புரிந்தால் பார்வையாளர்களுடன் நெருங்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இந்தி பேசி வளர்ந்ததால், அது எனக்கு சவுகரியமான மொழி என்றாலும் நடிப்புக்கு அது பிரச்சினையில்லை. என்னால், இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடியும். சில படங்கள் திரையரங்குகளில் சரியான வரவேற்பைப் பெறாவிட்டாலும் இந்தப் பயணத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
சினிமாவில் ஊதிய பாகுபாடு அதிகம் இருக்கிறது. காலப் போக்கில் இது மாறும் என நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.