கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
Updated on
1 min read

சென்னை: நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கணவன், மனைவியாக இருந்த நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

முன்னாள் மனைவியான பாடகி சுசித்ராவின் இந்தப் பேட்டி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாயை மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரரான கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவி்க்கக் கூடாது” என பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மனுவுக்கு சுசித்ரா பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in