ரீமேக்காகிறது ரஜினியின் மூன்று முகம்

ரீமேக்காகிறது ரஜினியின் மூன்று முகம்
Updated on
1 min read

ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற 'மூன்று முகம்' படத்தின் ரீமேக் உரிமையை சத்யா மூவிஸிடம் இருந்து '5 ஸ்டார் பிலிம்ஸ்' கதிரேசன் வாங்கியிருக்கிறார்.

ரஜினி, ராதிகா, செந்தாமரை உள்ளிட்ட பலர் நடிக்க ஜெகன்நாதன் இயக்கிய படம் 'மூன்று முகம்'. 1982-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை ரஜினிகாந்த்திற்கு பெற்று தந்தது.

போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினியின் நடிப்பும், வசன உச்சரிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அவ்வப்போது, ரஜினியின் 'மூன்று முகம்' ரீமேக்கில் இவர் நடிக்க இருக்கிறார், அவர் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாவது உண்டு. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.

தற்போது 'மூன்று முகம்' தமிழில் ரீமேக்காக இருப்பது உறுதியாகி இருக்கிறது. சத்யா மூவிஸ் நிறுவனத்திடம் இருந்து ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியிருக்கிறார்.

கதிரேசன் அளித்துள்ள பேட்டியில் "ரஜினி சாரின் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. 'மூன்று முகம்' ஒரு மாஸ் ஹீரோவிற்கான படம். அஜித், விஜய், கார்த்தி போன்ற பெரிய நடிகர்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in