

தன்னுடைய திருமணம் குறித்து வெளியான தகவல் பொய் என்றும், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் நடிகை கவுசல்யா தெரிவித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த கவுசல்யா, ‘ஏப்ரல் 19’ என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முரளியுடன் நடித்த ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படம் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தார். அத்துடன், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பிரம்மா டாட் காம்’. நகுல் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவருக்கு அம்மாவாக நடித்தார் கவுசல்யா. ‘கூட்டாளி’ படத்தில் நடித்துள்ள கவுசல்யா, தற்போது ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற தமிழ்ப் படத்திலும், சுரேஷ் கோபி நடிக்கும் ‘லீலம் 2’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவுசல்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அவருடைய பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை கவுசல்யா மறுத்துள்ளார். தன்னுடைய திருமணம் குறித்து வெளியான தகவல் பொய் என்று தெரிவித்துள்ள அவர், தற்போது தனக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.