வலி, வேதனை, கனவு, விரக்தி... - கவினின் ‘ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி? 

வலி, வேதனை, கனவு, விரக்தி... - கவினின் ‘ஸ்டார்’ ட்ரெய்லர் எப்படி? 
Updated on
1 min read

சென்னை: கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - நடிகராக வேண்டும் என்ற கனவு காணும் நடுத்தர வர்க்க இளைஞனின் ‘ஸ்டார்’ ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. தொடக்கத்திலேயே நடிப்பு என்பது எல்லாவற்றையும் மறக்கடிக்க வைப்பது என லால் குரல் ஒலிக்கிறது.

பாரதியாரின் அடையாளமான மீசையே இல்லாமல் வேஷம் தரித்தபோதிலும், நடிப்பால் அதனை மறக்கடிக்க வைக்கலாம் என்பதன் மூலம் நடிப்பின் ஆழத்தை உணர்த்தும் வசனம் அழுத்தம் கூட்டுகிறது. படம் முழுக்க நடிப்பை பற்றியே நகர்வதை தொடக்க காட்சியில் புரிந்துகொள்ளலாம்.

கவினின் வெவ்வேறு வயது கொண்ட தோற்றமும், இறுதியில் அழும் காட்சியும் இந்தப் படத்தை அவர் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

இழப்புகள், அவமானம், விரக்தி, குடும்ப சூழல் என உணர்ச்சிகள் நிரம்பிக் கிடக்கும் ட்ரெய்லரில், “நம்ம எல்லாரையும் ஏதோ ஒண்ணு பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், நாம தான் அதை உதச்சி தள்ளி மேல வரணும்”, “வயது முதிர்ந்த போதிலும், வலிகள் மிகுந்த போதிலும், வலிமை குறைந்த போதிலும்... வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை” ஆகிய வசனங்கள் சிறப்பு. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in