‘இளமை, இனிமையின் மறுபெயர் சி.வி. ராஜேந்திரன்’: மலரும் நினைவுகளில் நெகிழும் நடிகர் பிரபு

‘இளமை, இனிமையின் மறுபெயர் சி.வி. ராஜேந்திரன்’: மலரும் நினைவுகளில் நெகிழும் நடிகர் பிரபு

Published on

டிகர் பிரவுவை, ‘சங்கிலி’ படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். அவரது மறைவு குறித்து ‘தி இந்து’விடம் நடிகர் பிரபு தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். பிரபுவின் நினைவுகளில் இருந்து..

“அதிரடியான ஆக்ஷன் மசாலா படங்களும் பிழியும் சென்டிமென்ட் படங்களும் பெருகிக் கொண்டிருந்த காலத்தில் இளமை துள்ளல் மிக்க தனது படங்களின் மூலம் சினிமா பார்ப்பதை இனிமையான அனுபவமாக ஆக்கியவர் சி.வி.ராஜேந்திரன். சின்னவர் பெரியவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவருக்கும் இனிமையானவர். முதுமையிலும் கடைசிவரை அனைவரோடும் எப்போதும் தொடர்பில் இருந்தவர். எனது அப்பா (சிவாஜி கணேசன்), சித்தப்பாவுக்குப் (சிவாஜி கணேசன் தம்பி சண்முகம்) பிறகு இன்னொரு சித்தப்பாவாக அவரை எண்ணியிருந்தோம். எங்கள் குடும்பத்தின் மூத்த தலை ஒன்று சாய்ந்துவிட்டது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அவர் பேசும்போது.. “சி.வி.ராஜேந்திரன் சார் எனக்கு மிகவும் ஸ்பெஷல். ‘இயக்குநர் ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட சகோதரனாக சி.வி.ஆர் இருந்ததால் மட்டுமல்ல, சிறந்த கற்பனை வளமும் ரசனையும் கொண்டிருந்ததால்தான் அவரைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் ஸ்ரீதர்’ என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு உதாரணமாக இருந்த படம் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய ‘கலாட்டா கல்யாணம்’. ஸ்ரீதர் சாரின் படங்களுக்கு அன்று கல்லூரி மாணவர்கள் அதிகமாக வருவார்கள். அந்த அளவுக்கு ‘வெண்ணிற ஆடை’ தொடங்கி அவர் இயக்கிய பல படங்களுக்கு அவர் தேர்தெடுக்கும் கதை, கதாபாத்திரங்கள், காட்சியமைப்பு ஆகியவற்றில் இளமை நிரம்பி வழிந்ததற்கு சி.வி.ராஜேந்திரன் இணை இயக்குநராக இருந்ததும் ‘சித்ராலயா’ கோபு எழுத்தாளராக துணைநின்றதும் முக்கியமான காரணங்கள்.

ஸ்ரீதர் சார் இயக்கும் படங்களில் அப்பா நடிக்கும்போதெல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்குச் சென்றால் எங்களுடன் ஸ்ரீதரும் கோபுவும் கிரிக்கெட் விளையாடுவார்கள். எங்களை சி.வி.ஆர் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வார். அதில் ஒரு சித்தப்பாவுக்கு உரிய பாசம் இருக்கும். காரணம் எனது சித்தப்பா சண்முகத்தின் நெருங்கிய நண்பராக சி.வி.ஆர் இருந்தார். என்னைத் தம்பி என்றுதான் அழைப்பார். தனது வழியில் வீட்டிலிருந்து அடுத்து யார் நடிகராக வருவது என்ற எந்தத் திட்டமும் அப்பாவிடம் இல்லை. எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அப்பாவிடமும் சித்தப்பா சண்முகத்திடமும் இதுபற்றி பேசுவதற்கு தயங்கினேன். அந்தநேரத்தில் என்னை வழிமொழிந்து எனக்காக சித்தப்பாவிடம் பரிந்து பேசி, சித்தப்பா வழியே அப்பாவிடம் பேசி ‘சங்கிலி’ படத்தில் நான் நடிக்க அனுமதி வாங்கியவர் சி.வி.ஆர் என்பதை என்னால் மறக்கவே முடியாது.

அதேபோல ‘சங்கிலி’ படத்தில் ராஜாளி என்ற கதாபாத்திரத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் அவ்வளவு ‘பவர்ஃபுல்’லாக இருந்தது. ராஜாளி வேடத்தில் நடித்த எனக்கு ஒரு கால் இல்லை என்று தெரிந்ததும் என்னுடன் சண்டைபோட டி.எஸ்.பியாக நடித்த அப்பா தனது காலில் ஒன்றைக் கட்டிக்கொண்டு என்னுடன் மோதும் சண்டைக் காட்சியில் திரையரங்கில் விசில் பறக்கும். எனக்கு மட்டுமல்ல, அதுவரை சில கன்னடப் படங்களுக்கு சண்டை இயக்குநராகப் பணியாற்றியிருந்த விஜயன் மாஸ்டரையும் ‘சங்கிலி’ படத்தில்தான் தமிழில் ஸ்டன்ட் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு விஜயன் ‘பாலிவுட்’ சென்று அகில இந்திய அளவில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆனார். சி.வி.ஆர் அவ்வளவு கைராசி மிக்கவர். ‘ஆனந்த்’ உட்பட அவரது இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்திருக்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் குன்றும் முன்புவரை சி.வி.ஆருடன் வாரம் ஒருமுறையாவது தொலைபேசியில் பேசிவிடுவார். ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, திரையுலகில் அனைவருக்கும் இனிமையான மனிதராகத் தனது பழுத்த முதுமையின் இறுதி நாட்கள் வரை வாழ்ந்திருக்கிறார். எங்கள் வீட்டின் நிகழ்வுகள் அனைத்துக்கும் கமலும் ரஜினியும் வரும் முன்பே வீட்டின் தலைப்பிள்ளை போல முதலில் வந்துவிடும் ஒரு அதிசய உறவு என்றால் அது சி.வி.ஆர் சார்தான். அப்பாவுடன் ஜெயலலிதா முதல்முறையாக ஜோடி சேர்ந்த ‘கலாட்டா கல்யாணம்’ படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். ஆனால் அதற்கு முன்பே ஜெயலலிதாவின் தீவிர விசிறியாக நான் இருந்தேன். அப்பாவுடன் ஜெயலலிதா நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடந்தால் ‘தம்பி இன்னைக்கு அம்மு அம்மா ஷூட்டிங் வாராங்க.. வா’ என்று தனது காரில் என்னை கூட்டிச் செல்வார். எனக்குப் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது ஒரு கட்டத்துக்குப் பிறகு அலுத்துவிட்டது. ஆனால் “அப்பாவுடன் இணைந்து சிறப்பாக நடிக்கிற சக நடிகர்களையும் உன்னிப்பாகக் கவனி” என்று கூறி கூட்டிச் செல்வார். அதுதான் சி.வி.ஆர்!

திரையில் அவர் படைக்காத சாதனை இல்லை என்றே சொல்லிவிடலாம். அதேபோல எங்களது ‘ஹோம் பேனரில்’ இணைந்து ‘கோகிலா எங்கே போகிறாள்’ என்ற தொலைக்காட்சித் தொடரை ஓராண்டு காலம் இயக்கி சின்னத்திரையிலும் அவர் சாதனை படைத்துவிட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தில் ஒருவனாக நானும் எங்கள் குடும்பமும் தவிக்கிறோம்.. ’’என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் நடிகர் பிரபு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in