Published : 23 Apr 2024 07:07 AM
Last Updated : 23 Apr 2024 07:07 AM

பில்ஹணன்: ஒரே நேரத்தில் ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு 1940 மற்றும் 50-களில் பெரும் பங்காற்றியவர், இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இவர், ராஜகுமாரி, வேலைக்காரி, அரசிளங்குமரி, கைதி கண்ணாயிரம் உட்பட பல படங்களை இயக்கி இருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியுள்ள இவர், கொழும்பில் படித்துக் கொண்டிருந்தபோது நாடகங்களையும் எழுதி இருக்கிறார். அதில் ஒன்று, காஷ்மீர் கவிஞர் பில்ஹணன் பற்றியது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கொழும்பில் இருந்து இந்தியா திரும்பியது ஏ.எஸ்.ஏ.சாமியின் குடும்பம். அப்போது தனது,பில்ஹணன் நாடகத்தை திருச்சி வானொலிக்கு அனுப்பி வைத்தார் சாமி. அதை ஏற்றுக்கொண்டது வானொலி. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் பங்கேற்புடன் அந்த நாடகம் ஒலிபரப்பப் பட்டது. அதைக் கேட்ட டி.கே.சண்முகம், அவரது டிகேஎஸ் சகோதரர்கள் நாடகக் குழுவுக்காக வாங்கினார். பின்னர் அதை படமாக்கினார், டி.கே.சண்முகம். சினிமாவுக்காக அதை மாற்றி எழுதி கொடுத்தார் சாமி.

மன்னன் ஒருவன், தனது மகள் யாமினிக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஆசிரியராக பில்ஹணனை நியமிக்கிறான். இருவருக்கும் காதல் ஏற்பட்டுவிடாமல் இருக்க, பில்ஹணன் பார்வையற்றவர் என்கிறார் யாமினியிடம். பில்ஹணனிடம் யாமினி, அழகில்லாதவள் என்கிறார். இருவருக்கும் இடையில் திரை இருக்கிறது. ஒரு நாள் பில்ஹணன் நிலவை வர்ணித்து பாட, பார்வையற்ற ஒருவரால் எப்படி இவ்வளவு அழகாக நிலவை பாடமுடியும் என்று திரையை விலக்குகிறாள். பில்ஹணன் அழகில் விழுகிறாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். எதிர்க்கும் மன்னன் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்று கதை போகும்.

இந்தப் படத்தில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.கே.சிவதாணு, ‘ஃபிரெண்ட்’ ராமசாமி உட்பட பலர் நடித்தனர். கே.வி.சீனிவாசன் இயக்கினார். இவர், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் உட்பட சில படங்களை இயக்கிய கே.ஜே.மகாதேவனின் உறவினர்.

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 1948-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி சராசரி வெற்றியை மட்டுமே பெற்றது. இதையடுத்து முபாரக் பிக்சர்ஸ் நிறுவனம் இதே கதையை படமாக்கியது. பி.என்.ராவ் இயக்கிய இந்தப்படத்தில் கே.ஆர்.ராமசாமி பில்ஹணனாகவும் ஏ.ஆர்.சகுந்தலா யாமினியாகவும் நடித்தனர். துணை கதாபாத்திரங்களில் ஜி.சகுந்தலா, ஆர்.பாலசரஸ்வதிதேவி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஜெயஸ்ரீ, எம்.ஜெயா, அங்கமுத்து நடித்தனர். படத்துக்கு 'பில்ஹணா அல்லது கவியின் காதல்' என்று தலைப்பு வைத்தனர். 1948-ம் ஆண்டு நவ.1-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்தக் கதைக்கு காப்பிரைட் ஏதும் இல்லாததால் இதைதயாரிக்க சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் 1944-ல் திட்டமிட்டது. பில்ஹணனாக தியாகராஜ பாகவதர் நடிக்க இருப்பதாக விளம்பரமும் கொடுக்கப்பட்டது. ஆனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x